இளங்குடியில் படைப்புத் திருவிழா; பால்குடம், பூத்தட்டு எடுத்த கிராமத்தினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2024 01:05
நாச்சியாபுரம; திருப்புத்தூர் அருகே இளங்குடியில் வல்லநாட்டு கருப்பர், கொப்புடையம்மன் கோயில் படைப்பு திருவிழாவை முன்னிட்டு கிராமத்தினர் பால்குடம் பூத்தட்டு எடுத்தனர்.
கல்லல் ஒன்றியம் இளங்குடியில் வல்லநாட்டு கருப்பர், கொப்புடையம்மன் கோயில் உள்ளது. இங்கு 16 வது ஆண்டு படைப்பு திருவிழா நேற்று நடந்தது. படைப்புத் திருவிழாவை முன்னிட்டு கிராமத்தினர் பால்குடம், பூத்தட்டு எடுத்தனர். கோயில் வீட்டிலிருந்து கிராமத்தினர் பால்குடம் சுமந்து ஊர்வலமாக முன்னோடி தெய்வங்களை வழிபட்டு நடுவீதி வழியாக கொப்புடையம்மன் கோயில் வந்தனர். பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி சாமியாடி மற்றும் பால்குடங்களை வரவேற்றனர். பின்னர் சாமியாடி அரிவாள் ஏறி அருள் வாக்கு கூறினார். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்து சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த தீபாராதனையை பெண்கள் குலவையிட்டு தரிசித்தனர். பெண்கள் கோயில் வாசலில் கும்மி கொட்டியும், குலவை இட்டும் அம்மனை வழிபட்டனர். நேர்த்திக்கடனாக பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்தனர். பின்னர் வல்லநாட்டு கருப்பருக்கு கிடாய் வெட்டி அன்னதான விழா நடந்தது.