பராமரிப்பு இன்றி தீர்த்த தொட்டி : மாசடைந்த சுனை நீரால் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2024 04:05
போடி; போடி அருகே தீத்ததொட்டி ஆறுமுக நாயனார் கோயில் வளாக பகுதியில் மாசடைந்த தீர்த்த தொட்டி சுனை நீரால் பக்தர்கள் குளிப்பதில் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட போடி - தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில், ஆண்டு தோறும் சித்திரை முதல் தேதியில் திருவிழா நடக்கும். எப்போதும் வற்றாத நிலையில் மூலீகை கலந்த சுனை நீர் வரும் வகையில் தொட்டி அமைந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனை நீரில் நீராடுவர். இதோடு முருகன், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிய, நீராடி செல்வதற்கு புனித இடமாகும். சுனைநீர் அமைந்துள்ள தொட்டி பகுதியில் மண் கழிவுகளால் தண்ணீர் மாசு அடைந்தும், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் நீராட சிரமம் அடைந்த நிலையில் சுகாதார கேடும் ஏற்பட்டுகிறது. ஆண். பெண் இருபாலருக்கும் தனித்தனியே சுகாதார வளாகம், உடை மாற்றும் அறைக்கான கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. உரிய பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் நீராடி வரும் பெண் பக்தர்கள் உடை மாற்ற முடியாமல் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர். தீர்த்த சுனைநீர் தொட்டியை சுத்தப்படுத்தி கழிவுநீர் வெளியேற்றவும், சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.