பதிவு செய்த நாள்
27
மே
2024
03:05
துாத்துக்குடி; துாத்துக்குடி வைகுண்டபதி எனும் பெருமாள் கோயிலில் 70 க்கும் மேற்பட்ட கல்துாண்களை நிறுவி பிரகார கல்மண்டபம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஆந்திரா, சேலம், நாகர்கோவில் அருகே மயிலாடி, அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளிலிருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு கல்துாண்கள் வடிவமைக்கப்படுகிறது.
வேகமெடுக்கும் திருப்பணிகள்! ; துாத்துக்குடியில் மிகப் பழமையான பாகம்பிரியாள், சங்கரராமேஸ்வர் கோயில் எனும் சிவன்கோயில் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் கோயில் உள்ளது. வைகுண்டபதி கோயிலில் 35 ஆயிரம் சதுரஅடி பரப்பில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன் துவங்கிய இத்திருப்பணி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது. திருப்பணியின்போது ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், ஆஞ்சநேயர் சன்னதிகள் மாற்றியமைக்கப்படுகிறது.
இன்டர்லாக் முறையில் அமையும் துாண்கள்: கோயில் பிரகாரத்தை சுற்றி கல்துாண்மண்டபம் அமைக்கும் பணியில் சிற்பிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதில் 70 க்கும் மேல் கல்துாண்கள் அமைத்து மண்டபம் அமைய உள்ளது. முதலில் அஸ்திவாரம் அமைத்து துல்லியமாக கணித்து கல்லால் தளம் அமைத்து அதில் லாக் போல துவாரம் அமைக்கின்றனர். பின்னர் வேலைப்பாடு முடிந்த கல்துாண்களை துவாரம் அமைக்கப்பட்ட கல்தள பகுதிகளில் இன்டர்லாக் முறையில் நிறுவுகின்றனர். கல்துாண் செதுக்கும் பணிக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 10 க்கும் மேற்பட்ட சிற்பிகள் துாத்துக்குடியில் முகாமிட்டு உள்ளனர்.
கல்லில் கலைவண்ணம்!; கல்துாண் அமைக்க தேவைப்படும் உயரமான, அகலமான கற்களை தேர்வு செய்து வரவழைக்கப்படுகிறது. இதற்காக ஆந்திரா, சேலம், நாகர்கோவில் அருகே மயிலாடி, அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளிலிருந்து கற்கள் இறக்கப்பட்டுள்ளது. முதலில் கல்லின் மேல்பகுதியை கட்டிங் மிஷினால் வெட்டி எடுத்து பளபளப்பாக்குகின்றனர். இப்பணியின் போது ஏற்படும் கல்துாசிகளை பொருட்படுத்தாமல் இறைப்பணியை செய்கின்றனர். இந்த துாணில் பலவிதமான வேலைப்பாடுகளை செய்யும் சிற்பிகள் பின்னர் மெருகு ஏற்றுகின்றனர். பொதுவாக கல்துாண்களில் கீழே இருப்பது அனிவெட்டக்கால், கர்னக்கால், அதன்மேல் ஏற்கனவே செதுக்கிய போதியல் கல் வைக்கின்றனர். அதன்மேல் சிங்கம் செதுக்கப்பட்ட கல் வைத்து உத்திரம், சபதம், வேலைப்பாடுடைய நானுகால் போதியல் வைக்கப்படுகிறது. அதற்குமேல் மேல்தளமாக பாதுகல் அமைக்கப்படுகிறது. இந்த பாதுகல்லில் தான், சிற்பிகள் ஏற்கனவே செதுக்கிய கண்ணை கவரும் பூ டிசைன்கள் இருக்கும். கல்மண்டபத்தில் நுழைந்து மேலே பார்க்கும்போது இந்த பூ டிசைன் நம்மை பிரமிக்க வைக்கும் அளவிற்கு வேலைப்பாடு உள்ளது. இதுதவிர ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் சன்னதி அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.