பதிவு செய்த நாள்
28
மே
2024
11:05
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம், சாத்தமங்கலம் கிராமத்தில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், ஈசூர் அருகில் உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில், பல்லவர்களின் இறுதி ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பத்தை, வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தினர் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவரும், ஆசிரியருமான வடிவேல் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம், பாலாற்றின் வலது கரையில், 1 கி.மீ.,க்குள் அமைந்துள்ள ஊர் சாத்தமங்கலம். அங்கு, பழைய கற்சிற்பம் உள்ளதாக, அவ்வூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்களுடன் சென்று, அப்பகுதியில் கள ஆய்வு செய்தோம். அப்போது, வயல்வெளியில் மேடான பகுதியில், பாதி மண்ணில் புதைந்த நிலையில், பலகைக் கல்லால் ஆன புடைப்பு சிற்பம் இருப்பதை கண்டறிந்தோம். மண்ணை அகற்றி, சுத்தம் செய்து ஆய்வு செய்ததில், அது 5 அடி உயரம், 2.5 அடி அகலம் உடைய கொற்றவை சிற்பம் என்பதை அறிந்தோம். இச்சிற்பத்தில், கொற்றவை நான்கு கைகளுடன் உள்ளார். வலது மேல் கையில் தாமரை மொட்டும், இடது மேல் கையில் சங்கும் உள்ளது. வலது அடிக்கை ஆசீர்வாதம் செய்யும் வகையில் அபய நிலையிலும், இடது அடிக்கை இடுப்பில் ஊன்றி அடிஹஸ்த நிலையிலும் உள்ளது. தலையில் கரண்ட மகுடம் சூடி உள்ளார். சிற்றிடையில் ஆடையணிந்து, எருமை தலை மீது நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த சிற்பம், பல்லவர்களின் கடைசி ஆட்சிக் காலமான, 9 அல்லது 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். பாலாற்றங்கரையில், ஏற்கனவே பல ஊர்களில் பழமையான கொற்றவை, தவ்வை, துர்கை சிலைகள் கிடைத்துள்ளன. தற்போது கொற்றவை சிலை கிடைத்துள்ளது. இதிலிருந்து, பழங்கால வட தமிழகத்தில், பெண் தெய்வ வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. மிகவும் அரிதான, பழமையான இந்த சிற்பத்தை பாதுகாக்க, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.