பதிவு செய்த நாள்
28
மே
2024
11:05
திருப்பூர்: தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று, ஸ்ரீநடராஜப்பெருமான் - சிவகாமசுந்தரி அம்மன் மஹாதரிசன காட்சி, கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பல்வேறு வாகன காட்சிகளை தொடர்ந்து, 23 மற்றும் 24ம் தேதிகளில், தேரோட்டம் விமரிசையாக நடந்தது. விழாவின், 11வது நாளான நேற்று, மஹா தரி சன காட்சி நடைபெற்றது. கனகசபையில் இருந்து அருள்பாலிக்கும் ஆனந்த நடராஜ பெருமான், சிவகாமசுந்தரி அம்மனுக்கு, 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் தனி சப்பரங்களில் எழுந்தருளி, திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பல்வேறு வைபவங்கள் நடந்தாலும், ஸ்ரீநடராஜப்பெருமான் - சிவகாமசுந்தரி அம்மன், கோவிலில் இருந்து, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வெளியே வருவது வழக்கம். ஆருத்ரா தரிசனத்தின் போதும், தேர்த்திருவிழா மஹா தரிசனத்தின் போது மட்டும், ஆடல்வல்லான் என்று போற்றப்படும் ஆனந்த நடராஜர் திருவீதியுலா வந்து காட்சிகொடுக்கிறார். அதன்படி, நேற்றைய மஹா தரிசனத்தின் போது, திருவீதியுலா வந்த, அம்மையப்பரை, பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, பெருமாள் கோவில் வீதி வழியாக வந்து, அம்மையப்பருடன் திருவீதியுலா சென்று அருள்பாலித்தனர். நான்கு வீதிகளை சுற்றி வந்த பிறகு, ஈஸ்வரன் கோவில் அருகே வந்து, ஸ்ரீநடராஜர் - சிவகாமசுந்தரி அம்மனிடம்விடைபெற்று, பெருமாள்கோவில் வீதி வழியாக நம்பெருமாள் மீண்டும் கோவிலுக்கு சென்றார். தேர்த்திருவிழாவில் இன்று, மஞ்சள் நீராட்டு விழா, மலர் பல்லக்கு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.