பதிவு செய்த நாள்
29
மே
2024
12:05
சென்னை: நாளை கன்னியாகுமரி, வரும் பிரதமர் மோடி, பகவதி அம்மனை தரிசிக்கிறார்; திருவள்ளுவர் சிலையையும் பார்வையிடுகிறார்.
சுவாமி விவேகானந்தரின், வளர்ந்த இந்தியா என்ற பார்வையை உயிர்ப்பிக்கச் செய்யவே, பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா தேர்தலுக்காக, மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. பிரசாரத்தின் முடிவில், பிரதமர் மோடி, ஆன்மிக பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நாளை மதியம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் மோடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார். ஜூன், 1 வரை அங்கேயே தங்குகிறார். இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சுவாமி விவேகானந்தர், பாரத மாதாவை தரிசனம் செய்த இடம் கன்னியாகுமரி. அங்கு கடலில் அமைந்துள்ள பாறை, சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புத்தரின் வாழ்வில் சாரநாத் சிறப்பு இடம் பெற்றதை போல, சுவாமி விவேகானந்தரின் வாழ்வில், இந்தப் பாறை ஒரு சிறப்பு இடத்தை பெற்றுள்ளது என, மக்கள் நம்புகின்றனர். அவர், நாடு முழுதும் சென்று, பின் கன்னியாகுமரி வந்து மூன்று நாட்கள் தியானம் இருந்து, வளர்ந்த இந்தியாவை நோக்கிய பார்வையை அடைந்தார்.
அதே இடத்தில் தியானம் செய்வதன் வாயிலாக, விவேகானந்தரின் வளர்ந்த இந்தியாவின் பார்வையை உயிர்ப்பிக்க செய்வதில், பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. பார்வதி தேவியும், அதே இடத்தில் பகவான் சிவனுக்காக காத்திருந்தபடி, ஒரே காலில் தியானம் செய்தார். கன்னியாகுமரி, நாட்டின் தென்பகுதியின் கடைகோடி முனை. மேலும், இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகியவை சங்கமிக்கும் இடம். கன்னியாகுமரிக்கு சென்று தேச ஒற்றுமையை பிரதமர் மோடி வலியுறுத்துகிறார். தேர்தல் முடிந்த பின்னரும், அவர் தமிழகத்திற்கு வருவது, தமிழகத்தின் மீதான மோடியின் ஆழ்ந்த அர்ப்பணிப்பையும், அன்பையும் காட்டுகிறது.கடந்த, 2019ல் தேர்தல் பிரசாரம் நிறைவில் பிரதமர் மோடி, உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் சென்றார். அதற்கு முன், 2014ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிவாஜி பிரதாப்கர் சென்றிருந்தார்.