பதிவு செய்த நாள்
08
நவ
2012
10:11
திருச்சி: ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை ஸ்திரப்படுத்தும் வகையில், ராஜகோபுரத்தின் பக்கவாட்டில் கான்கீரிட் அமைக்கும் பணி துவங்கியுள்ளது."பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். கோவிலுக்கு முத்தாய்ப்பாக, 236 அடி உயரத்துடன், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் என்ற பெருமையை பெற்றது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்.மொட்டை கோபுரமாக நின்ற தெற்கு கோபுரம், கடந்த 20.5.79 அன்று அஹோபில மடம், 44வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகளால், ஸ்ரீரங்கம் சிவப்பிரகாச ஸ்தபதியினால், ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கியது. 25.3.1987ல் குடமுழுக்கு நடந்தது.ராஜகோபுர கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விரிசல்கள், கண்ணாடித் துண்டுகள் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டன. விரிசல் அதிகமானதால், கண்ணாடி துண்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தன. இதுகுறித்து அமிர்தம் சமூகச்சேவை அறக்கட்டளை அறங்காவலர் வக்கீல் சித்ரா விஜயகுமார் முதல்வருக்கு மனு அனுப்பினார்.அதையடுத்து, கடந்த, 2010ம் ஆண்டு ஜூன், 21ம் தேதி, இந்து சமய அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா, தலைமை பொறியாளர், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., கட்டடக்கலை பொறியாளர்கள், அறநிலையத்துறை இணை கமிஷனர் மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை கமிஷனரின் பிரதிநிதி அடங்கிய எட்டு பேர் குழு கோபுரத்தை ஆய்வு செய்தனர்.
ராஜகோபுரத்தின் விரிசல், கோபுரத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோபுரத்தை காக்க, கோபுரத்தை சுற்றி, 10 மீட்டர் சுற்றளவுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றவேண்டும். கோபுரத்தின் அடிப்பகுதி விரிவடைவதையும், புதைவதையும் தடுக்க, பக்கவாட்டில் கான்கீரிட் தளம் அமைக்கவேண்டும்.கோபுரத்தின் உள்ளே கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்க வேண்டும். 100 மீட்டர் சுற்றளவில் "போர்வெல் அமைக்கக்கூடாது. கோபுரத்தின் அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தடைச் செய்யவேண்டும் போன்ற பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர். இதையடுத்து கோபுரத்தின் உள்ளே வாகனங்கள் செல்வது உடனடியாக தடை விதிக்கப்பட்டது. கோபுரத்தில் செடிகள் முளைக்காத வகையில், மருந்து வைக்கும் பணி நடந்தது. இந்நிலையில், பக்கவாட்டில் கான்கீரிட் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.முதல் கோணல்: ராஜகோபுரத்தை ஆய்வு செய்த பல்வேறு வல்லுனர் குழுக்கள், தங்களது முதல் பரிந்துரையாக, "10 மீட்டர் சுற்றளவில் ராஜகோபுரத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முதலில் அதை நிறைவேற்ற, ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் முன்வர வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.