பதிவு செய்த நாள்
08
நவ
2012
10:11
திருவள்ளூர் மாவட்டத்தில், 848 கோவில்கள் மற்றும் 12 மடங்களுக்கு சொந்தமான, 6,680 ஏக்கர் நிலத்தை அனுபவிப்பவர்கள், செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி, 50 லட்சம் ரூபாய் உள்ளது என, கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. பாக்கி வைத்து இருப்பவர்களின், பெயர் பட்டியலை வெளியிட, அறநிலைய துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். கணக்கெடுப்பு அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்த, அரசுக்கு ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, வருவாய் துறையினர் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று, கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் அசல் பத்திரம், வரைபடம், அதில் உள்ள ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்பாளரின் விவரங்களை கணக்கெடுத்து உள்ளனர்.மேலும், கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டி உள்ள வீடுகள், அனுபவித்து வருபவரின் விவரம், எத்தனை ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர், குத்தகை பாக்கி எவ்வளவு போன்ற விவரங்களையும் கணக்கெடுத்து வருகின்றனர். இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத வருவாய் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""மாவட்டத்தில், அறநிலைய துறை கோவில்களுக்கு சொந்தமாக, 14,420 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், 6,680 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு அனுபவிப்பவர்கள், 50 லட்சம் ரூபாய் தொகையை பாக்கி வைத்து உள்ளனர், என்றார்.மேலும், ""கோவில் நிலங்களை அனுபவிப்பவர்கள், தங்களது நிலம் போல, மற்றவர்களுக்கு உள் குத்தகை விட்டு பணம் பார்ப்பதும், கணக்கெடுப்பின் போது தெரிய வந்து உள்ளது. இதுகுறித்த விவரங்கள் இந்து அறநிலைய துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது, என்றார்.விரைவில் நடவடிக்கை இது குறித்து, அறநிலைய துறை இணை ஆணையர் ஒருவர் கூறுகையில், ""இந்த மாவட்டத்தில் கோவில் நிலங்களை அனுபவித்து, குத்தகை தராதவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. குத்தகை தொகையை கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் மூலம் வசூலிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது என்றார். மேலும், கோவில் நிலங்களை அனுபவித்து, குத்தகை தொகை தராமல் உள்ளவர்களின் பெயர், தொகை குறித்த விவரங்களை, அந்தந்த கோவிலின் முன் பொதுமக்கள் பார்வைக்கு விரைவில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது, என்றார்.