பதிவு செய்த நாள்
03
ஜூன்
2024
10:06
ஆத்துார்; லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டி, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., சிறப்பு வழிபாடு செய்தார்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, ஏத்தாப்பூர் பகுதியில் முத்துமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 146 அடி உயரத்தில் முருகன் மற்றும் 108 அடி உயரத்தில் வேல் சிலை உள்ளது. இக்கோவிலில் இன்று காலை, 10:00 மணியளவில், அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., தன் பிறந்த நாள் மற்றும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறவேண்டி, வழிபாடு செய்வதற்கு வந்தார். தங்க கவச அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த, மூலவர் முத்துமலை முருகனை வழிபாடு செய்து, கருவறையில் வைத்துள்ள வேலை தன் கையில் வாங்கி கருவறையை சுற்றி வந்தார். தொடர்ந்து, 146 அடி உயர முருகன் கையில், 108 அடி உயரத்தில் உள்ள வேலுக்கு, காலை, 10:20 மணியளவில், ‘பன்னீர்’ அபிேஷகம் செய்து வழிபாடு செய்தார். காலை, 10:35 முதல், 10:47 மணி என, 17 நிமிடம், முருகன் சிலையின் வயிற்று பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார். கோவில் மற்றும் அன்னதான மண்டபத்தில், பக்தர்களுக்கு அ.தி.மு.க., சார்பில், அன்னதானம் வழங்கினார். இதில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள், ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திக்கு முக்காடிய இ.பி.எஸ்.,; முருகன் கோவிலில், அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., வழிபாடு செய்து வந்தபோது, அங்கு வந்த நரிக்குறவர் சமுதாய பெண், அவரது கையை இறுக பற்றிக் கொண்டு, ‘எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு தான்’ என்று கூறியதால், இ.பி.எஸ்., புன்னகைத்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்.