ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மாசாணம் சுவாமி கோயில் விழா; கறி விருந்தில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2024 12:06
நரிக்குடி; நேர்த்திக்கடனுக்காக விடப்படும் ஆடுகள், கோழிகள், சேவல்கள் மொத்தமாக சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
நரிக்குடி மறையூரில் மாசாணம் சுவாமி கோயில் வைகாசி திருவிழா நடந்தது. நேற்று இரவு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, நள்ளிரவில் கப்பரை பூஜை நடந்தது. மறையூர் மந்தையம்மன் கோயிலலிருந்து புறப்பட்ட மாசாணம் சுவாமி, அரியசாமி, வீரபத்திர சுவாமி கோயில் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மாசாணம் கோயிலில் அம்மி கல்லில் மஞ்சளை வைத்து தட்டி, சுவாமி உத்தரவுக்கு பின் பீடமாக செய்து பக்தர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டது. பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட 100க்கு மேற்பட்ட ஆடுகள், சேவல்கள், கோழிகளை பலியிட்டு உணவாக சமைத்து, அன்னதானம் நடந்தது. காலை 5 மணிக்கு தொடங்கி சூரிய உதயத்திற்கு முன் அன்னதானத்தை முடித்து விடுவர். குறிப்பாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வினோத நிகழ்ச்சியாக இருந்தது. எஞ்சிய கறி சோறு வெளியில் எடுத்துச் செல்ல கூடாது. அங்கு பள்ளம் தோண்டி கொட்டி புதைத்து விடுவர். சென்னை, மதுரை, கோவை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மனம் உருகி வேண்டி அருள் பெற்றுச் சென்றனர்.