காரமடை அருகே அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2024 02:06
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே புங்கம்பாளையம் குமரன் நகர் பகுதியில் உள்ள பழமையான அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் ஊர் மக்கள் திருமணம் செய்து வைத்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே புங்கம்பாளையம் பகுதி உள்ளது. இங்கு குமரன் நகரில் பழமையான அரச மரமும், அதன் அருகில் வேப்ப மரமும் உள்ளது. இதில் அரச மரத்தை சிவனாகவும், வேப்ப மரத்தை சக்தியாகவும் கருதி திருக்கல்யாண வைபவம் ஊர் மக்களால் நடத்தப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த நிகழ்வுக்காக, முறைப்படி திருமண அழைப்பிதழ் அடித்து மக்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். பின், மங்கல இசையுடன் விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவசம், கலச பூஜை, தீபாராதனை போன்றவைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிவபெருமான் மற்றும் பார்வதிக்கு கலாசாபிஷேகமும், அதைத்தொடர்ந்து திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. பின் உலக அமைதி, மழை வேண்டி சிறப்பு அபிஷேகம் பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் புங்கம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.