ஊத்துக்கோட்டை; தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை மற்றும் உற்சவர் அம்மன் புறப்பாடு ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். ஒவ்வொரு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், 2014ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது, 10 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணிக்கு கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. பாலாலயம் செய்யப்பட்டதால், கோவில் மூலவர் அம்மனை தரிசனம் செய்ய முடியாது. உற்சவர் அம்மனை மட்டுமே தரிசிக்க முடியும். கோவிலை சீரமைத்து, ஒரு மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.