பதிவு செய்த நாள்
14
ஜூன்
2024
03:06
பந்தலூர்; பந்தலூர் அருகே ஓடக்கம்வயல் பழங்குடியின மக்கள் இணைந்து பகவதி அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
பந்தலூர் அருகே ஒடக்கம் வயல் பகுதியில் பழங்குடியின மக்கள் வழிபடும், பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வனப்பகுதியில் மரத்தின் அடியில் வன பகவதியை கற்சிலையாக வடிவமைத்து அம்மனுக்கு, விளக்கேற்றி, அவல், கடலை பிரசாதமாக வைத்து வழிபாடு துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகி வீட்டில் இருந்து, அம்மனின் வாள், அம்மனுக்கும், சாமி ஆடிகளுக்கும் தேவையான துணிகள் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களை தலைசுமையாக சுமந்து, இப்பகுதியில் உள்ள வயநாடு செட்டி சமுதாய மக்களின் வீடுகளுக்கு சென்று, பகவதி அம்மன் அருளுடன், வாக்கு கூறி பிரசாதம் வழங்கி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஈட்டியால் தேங்காய் உடைத்து பக்தர்களுக்கு குறி சொல்லி, தீர்த்தம் வழங்கி பிரசாதமாக அவல் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகி நெங்ஙி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் இசையுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற கலாச்சார நடனம் இடம்பெற்றது. வனங்கள் செழிப்படைந்து, நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திருவிழா மட்டும் பூஜைகளில் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி வயநாடு செட்டி சமுதாய மக்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.