பதிவு செய்த நாள்
18
ஜூன்
2024
03:06
கோத்தகிரி; கோத்தகிரி அருகே உள்ள மடித்தொரை கிராமத்தில், அருள்மிகு ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
ஊட்டி தும்மனிட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, மடித்தோரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருக்கோவில் பனரமைப்பு பணி, நிறைவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த சனிக்கிழமை, காலை, 8:30 மணிக்கு, மங்கள இசை முழுங்க ஸ்ரீ விநாயகர் பூஜை மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் சிறப்பாக நடந்தது. காலை, 11:00 மணிக்கு, ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க, முளைப்பாரி தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, வாஸ்து பூஜை, கோபுர கலசம் வைத்தல், பூர்ணாகுதி, தீபாராதனை, கோபுர கலசம் வைத்தல், பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மாலை, 5:30 மணிக்கு, மங்கள இசை, வேத பாராயணம், மூன்றாம் கால யாக பூஜையை தொடர்ந்து, மகா தீபாரதனை இருந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று (17ம் தேதி), காலை, 4:30 மணிக்கு, மங்கள இசை, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம் நிகழ்ச்சியை தொடர்ந்து, மூலவர் திருமேனிக்கு, அருள் சக்தியை கொண்டு வரும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு, விநாயகர், நவக்கிரகம், ராஜகோபுரம் விமானம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் பூசாரி உட்பட, பக்தர்கள் ஸ்ரீ மாயக்கண்ணா; ஸ்ரீ கிருஷ்ணா என, கோஷம் எழுப்பப்பட்டது . தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னததானம் வழங்கப்பட்டது. விழாவில், மடித்தொரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அகண்ட பஜனை, ஆடல் பாடல், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் போஜன் தலைமையில், கோவில் கமிட்டியினர், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.