பதிவு செய்த நாள்
19
ஜூன்
2024
05:06
தாடிக்கொம்பு; தாடிக்கொம்பு பேரூராட்சி டி.அய்யம்பாளையத்தில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன் கோயில்கள் ஊர் பொதுவில் உள்ளது. இந்த கோயில்களின் நகைப்பெட்டி, கவுடர் சமூகத்திற்கு சொந்தமான, ஊரின் மையத்தில் உள்ள பெருமாள் கோயிலில் வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2012 இல் இரு தரப்பினர் இடையே, பெருமாள் கோயில் உரிமை சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டது. திண்டுக்கல் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், 2016 இல் பெருமாள் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
8 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த வாரம் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் தலைமையில், மீண்டும் நடந்த பேச்சு வார்த்தையில், பெருமாள் கோயில் குறிப்பிட்ட கவுடர் சமூகத்திற்கு பாத்தியப்பட்டது என்றும், அதில் நகை பெட்டியை வைத்து பாதுகாக்கவும், பராமரிக்கவும், திருவிழா காலங்களில் எடுத்து சென்று வழிபடவும் மட்டும் உரிமை உண்டு என்று முடிவானது. இதைத் தொடர்ந்து அனைத்து தரப்பினரும், ஒற்றுமையுடன் சாமி கும்பிடுவதாக ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, பெருமாள் கோயிலில் வைக்கப்பட்ட சீல் இன்று மதியம், திண்டுக்கல் மேற்கு தாசில்தார் வில்சன் தேவதாஸ் முன்னிலையில் அகற்றப்பட்டு, கோவில் திறக்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்று, சாமி கும்பிட்டு சென்றனர்.