நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டம்; ஆரூரா... தியாகேசா.. கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2024 10:06
நாகை ; 1000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆரூரா... தியாகேசா.. என பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் நாகூரில் 1000,ம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நாகநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா 12ம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக துவங்கியது. விழாவில் தினமும் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. நாகூர் தேரடி வீதியில் தொடங்கிய திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து திருத்தேரில் எழுந்தருளிய நாகநாத சுவாமிகளுக்கு பூஜை செய்த பக்தர்கள் ஆரூரா.. தியாகேசா... என பக்தி பரவசத்துடன் தேரினை இழுத்து வர தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது தேரோட்ட நிகழ்ச்சியில் சிவ வாத்தியங்கள், செண்டை மேளங்கள் முழங்க, நாகநாத சுவாமி கோவில் திருவிழா கலை கட்டியது.தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நாகை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.