பதிவு செய்த நாள்
20
ஜூன்
2024
01:06
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நல்லேந்தல், மறவமங்கலத்தில் முதுமக்கள் தாழி, இரும்பு எச்சங்கள், கல் வட்டங்கள் இருப்பதை காரைக்குடி அழகப்பா பல்கலை வரலாற்று ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், இலந்தக்கரை ரமேஷ் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர். வாகைக்குளம், நல்லேந்தல் ஆற்றுப் பள்ளத்தாக்கில், 20 ஏக்கரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் முதுமக்கள் தாழி மண்ணில் புதையுண்டு கிடப்பதை அறிந்தனர். இவை பெருங்கற்காலமான, 2600 முதல், 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. ஒரே இடத்தில் 5 அடுக்குகள் கொண்ட முதுமக்கள் தாழி, 3 அடுக்குகள் கொண்ட முதுமக்கள் தாழிகள் உள்ளன. இங்கு இரும்பு எச்சங்களும், சுண்ணாம்பு படிவக் கற்களும் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும் காணப்படுகின்றன. கல் வட்டங்களும் உள்ளன. சுண்ணாம்பு பாறை கற்கள் தென்படுகின்றன. பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை நேரடியாக மண்ணில் அடக்கம் செய்யாமல் முதியவர்களை முதுமக்கள் தாழிக்குள் வைத்து அடக்கம் செய்துள்ளனர். இங்குக் காணப்படும் சிறு தாழிகள் மூலம், குழந்தைகளும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. தற்போது இப்பகுதியில் துார்வாரும் போது, இது போன்ற பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, கல்வட்டத்தை காண முடிகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.