பதிவு செய்த நாள்
26
ஜூன்
2024
03:06
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சி காவேரிசெட்டிபட்டி விநாயகர்,காளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி நேற்று திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர் கோயில் மலை, வைகை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், மகா சங்கல்ப்பம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று விநாயகர் யாகம், மகா சங்கல்ப்பம், வேத பாராயணம், உயிர் ஊட்டுதல், மூலிகை யாகம், தீப ஆராதனை உள்ளிட்ட 3 கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க தீர்த்தம் கோயிலின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது 5 ற்கும் மேற்பட்ட கருடர்கள் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள், பக்தி பரவசமடைந்தனர். கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை காவேரி செட்டிபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.