பதிவு செய்த நாள்
27
ஜூன்
2024
05:06
ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டத்தின் வழியாக செல்லும் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ள நிலையில்,
கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீர்வரத்து ஓடைகளில் பாலங்கள் கட்டவும், அபாயகரமான இடங்களில் கைப்பிடி அமைக்கவும் வனத்துறை அனுமதி அளிப்பதில் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் சதுரகிரி பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உட்பட பல்வேறு வெளிமாநில பக்தர்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தாணிப்பாறை மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழியில் மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, பிலாவடி கருப்பசாமி கோயில் உட்பட பல இடங்களில் நீர்வரத்து ஓடைகள் இருப்பதால் மழை நேரத்தில் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, நீர்வரத்து ஓடை அமைந்துள்ள 7 இடங்களில் பாலங்கள் கட்டவும், செங்குத்தான 5 இடங்களில் கைப்பிடிகள் அமைக்கவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டு வனத்துறை அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அனுமதி தருவதில் வனத்துறை மிகுந்த காலதாமதம் செய்து வந்தது.
இதனால் மழைக்காலங்களில் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பாலங்கள் கட்டவும், கைப்பிடிகள் அமைக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அறநிலையம் மற்றும் வனத்துறை அமைச்சர்கள் கூட்டு ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பான ஆவணங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, சென்னை முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகத்திற்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் பணிகளை மேற்கொள்ள அறநிலைத்துறை தயார் நிலையில் இருந்தும், இதுவரை எவ்வித முடிவும் தெரிவிக்கப்படாததால் ஒவ்வொரு மாதமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதே மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதியில் கேரளாவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள சபரி மலைக்கு, ஒவ்வொரு தமிழ் மாதமும் பல லட்சம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். ஆனால், அதே மேற்கு தொடர்ச்சி மலையின் மற்றொரு பகுதியில் தமிழகத்தில் உள்ள சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீர்வரத்து ஓடைகளில் பக்தர்கள் பாதுகாப்பு கருதி பாலங்கள் கட்டவும், செங்குத்தான வழித்தடங்களில் கைப்பிடிகள் அமைக்கவும் வனத்துறை அனுமதி அளிப்பதில் காலதாமதம் செய்வது பக்தர்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலைக்கு ஒரு நீதி, சதுரகிரிக்கு ஒரு நீதியா என பக்தர்கள் குமுறுகின்றனர்.