பதிவு செய்த நாள்
12
நவ
2012
11:11
ஊட்டி:ஊட்டியில் நவ 11 துவங்கிய ஜோதி யாத்திரையை, மாநில சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா துவக்கி வைத்தார். அடுத்த மாதம் 12ம் தேதி, உலக அமைதி நாளாக கடைபிடிக்க ரமண மகரிஷி சன்மார்க்க பக்தி சங்கம் முடிவெடுத்துள்ளது. இதற்கான ஜோதி யாத்திரை நவ 11 ஊட்டி ஐயப்பன் கோவிலில் துவங்கியது. மாநில சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா துவக்கி வைத்தார். ரமண மகரிஷி சன்மார்க்க சங்க துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சம்பத் கூறியதாவது: அடுத்த மாதம் 12ம் தேதி "கோடி கன்னியாதான நட்சத்திரம் உள்ள நாள்; அந்நாளில் கோடி திருமணங்கள் நடக்க கூடி மிக சுபிட்சமான நாள். தவிர, சிறப்பு வாய்ந்த "போதாயன அமாவாசை நாளாகவும் உள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி மதியம் 12 மணி 12 நிமிடம் 12 நொடியை (12:12:12) உலகம் தழுவிய உலக அமைதி நேரமாக கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், இயற்கையை காப்பது, மரம் வளர்ப்பது உட்பட இயற்கை, சுற்றுச்சூழலை பேணி காக்கும் உறுதி மொழி ஏற்கவும் அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பிட்ட அந்த 12:12:12 மணிக்கு உலகில் உள்ள மக்கள் உலக அமைதியை வலியுறுத்தி, ஊட்டி எச்.ஏ.டி.பி., திறந்த வெளி மைதானத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தவுள்ளோம். இப்பிரார்த்தனையில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தொலை தூரங்களில் இருந்து வர முடியாதவர்கள் அந்த குறிப்பிட்ட அந்த மணி நேரத்தில் (12:12:12) தாங்கள் இருக்கும் இடத்திலேயே தீபம் ஏற்றி, ஒரு நிமிடம் மவுனமாக இருக்க வேண்டும். நீலகிரியில் உள்ள மக்கள் உலக அமைதி தியானத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்ற அழைப்பை விடுக்க, யாத்திரை ஜோதி ஏந்தி, மாவட்டத்தில் உள்ள 600 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்லவுள்ளோம். இந்த 12:12:12 என்ற சிறப்பு மிக்க நாளில் மீண்டும் அடுத்த 89 ஆண்டுகளுக்கு (1:1:2101) பிறகு தான் வரும். இவ்வாறு, டாக்டர் சம்பத் கூறினார். இதற்கான ஏற்பாடுகளை, ரமண மகரிஷி சன்மார்க்க பக்தி சங்க நிறுவனர் மவுன துறவி சத்யானந்த மகராஜ், தலைவர் சத்பிரபாவனந்தா, செயலர் டாக்டர் தாமோதர கண்ணன், தொழிலதிபர் வெங்கடேசன் உட்பட பலர் செய்திருந்தனர்.