பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவது குறித்து சமீபத்தில் பக்தர்கள் ஆலோசித்தனர். இருப்பினும், இதற்கு அறநிலையத்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும், இதற்கான நிதி திரட்ட வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. பக்தர்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப, தற்போது, ராஜகோபுரம் கட்ட அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, அறநிலையத்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 15 கோவில்களில் ராஜகோபுரம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், பல்லடம் பொன்காளியம்மன் கோவிலும் ஒன்று. அறநிலையத்துறையின் இந்த அறிவிப்பை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது : பல்லடத்தில், ஹிந்து அறநிலையத்துறையை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்கள், இருக்கும் இடமே தெரியாத நிலையில் தான் உள்ளன. பழமையான கோவில்களுக்கு ராஜகோபுரம் கூட கிடையாது. பொன்காளியம்மன் கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கி பல்வேறு இடையூறுகள் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, ராஜகோபுரம் கட்ட அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.