பதிவு செய்த நாள்
02
ஜூலை
2024
10:07
கார்த்திகை முருகனுக்கு உரிய மிக முக்கிய விரதமாகும். இவ்விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர். இன்று மறுமைக்கு வழி காட்டும் அபரா ஏகாதசி தினம். கோயில்களில் பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும்.
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார். தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர். கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. நாம் அறியாமல் செய்த பிழைகளை முருகன் பொறுத்துக் கொள்வார். பிள்ளை போல பிரியம் காட்டுவார், என்று கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. என்னைப் பெற்றவன் நீயே! என் பிழைகளைப் பொறுத்துக் கொள்வது உன் கடமை! என்று, கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள் முருகனிடம் வேண்டுகிறார். நாமும் கார்த்திகை நன்னாளில் முருகப்பெருமானை வணங்கி நற்பலன்கள் பெறுவோம்.
பூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்திருந்தது. அப்போது, விஷ்ணுவின் உடலில் இருந்த மாயாசக்தி, ஒரு பெண்ணின் வடிவெடுத்து, அவர்களை அழிக்க புறப்பட்டது. வெற்றியுடன் வைகுண்டம் திரும்பிய அந்த சக்தியைப் போற்றிய நாளே வைகுண்ட ஏகாதசி. அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் ஏற்பட்டதாக பத்மபுராணம் கூறுகிறது. பாற்கடலில் பெற்ற அமிர்தத்தை மோகினி வடிவெடுத்த விஷ்ணு, தேவர்களுக்கு வழங்கிய நாளே வைகுண்ட ஏகாதசி என்றும் சொல்வர். உபநிடதங்களின் சாரமாக விளங்குவது பகவத்கீதை. கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்த நாள் ஏகாதசியன்று தான். அதனால், இந்த திதிக்கு கீதா ஜெயந்தி என்றும் பெயருண்டு. இன்று பெருமாளை வழிபட நல்லதே நடக்கும்.