பதிவு செய்த நாள்
02
ஜூலை
2024
05:07
நத்தம்; சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி மாத கார்த்திகை விழாவில் சாமி ஊர்வல நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமலைக்கேணியில் ஆனி மாத கார்த்திகை விழாவையொட்டி மூலவர் சுப்ரமணிய சுவாமி, உற்ஸவர் முருகப்பெருமானுக்கும் பால், பழம், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பின் லட்சார்ச்சனை, தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷமிட கோயிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். திண்டுக்கல், சாணார்பட்டி,நத்தம், கோபால்பட்டி, செந்துறை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். காமாட்சி மவுனகுரு மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோயில் அறக்காவலர் அழகுலிங்கம் செய்திருந்தார். நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோயிலில் உள்ள வெற்றிவேல் முருகன் சன்னிதியில் ஆனி மாத கார்த்திகை விழா பூஜையில் முருகனுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. வேம்பார்பட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.