பஞ்ச பாண்டவர் மலையில் அசுத்தமான சுனைகள்; கண்டு கொள்ளாத அதிகாரிகள்.. மக்களே தூர்வாரினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2024 04:07
மேலுார்; கீழவளவு பஞ்சபாண்டவர் மலை மீது உள்ள சுனைகளை (தண்ணீர் தேங்கும் இடம்) சமூக ஆர்வலர் தலைமையில் மக்கள் துார்வாரிய செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இம் மலையில் ஆறு தீர்த்தங்கரர் சிலைகளும், பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் சமன படுக்கைள் உள்ளதால் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த மலையாகும். இம் மலையின் அடிவாரத்தில் விநாயகர், முருகன் கோயில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் இக் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும். மலை முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மலையின் மேல் பகுதியில் பாறை இடுக்குகளில் இருந்து இயற்கையாக உருவாகும் தண்ணீர் அங்குள்ள மூன்று சுனைகளில் தேங்கும். இச்சுனைகள் என்றுமே வற்றாது. இத் தண்ணீரை சுவாமி அபிஷேகத்திற்கும் பக்தர்கள் தீர்த்தமாக பயன்படுத்தி வருகின்றனர். இச் சுனைகளை தொல்லியல் துறையினர் பராமரிப்பு செய்யாததால் தண்ணீர் அசுத்தமாகவும், தண்ணீர் சுனைகளுக்கு வராமல் மலையின் பல பகுதிகளுக்கு செல்ல ஆரம்பித்தது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. அதனால் இன்று சமூக ஆர்வலர் செந்தில்குமார் தலைமையில் வடக்கு வலையபட்டி மற்றும் கீழவளவு மக்கள் மூன்று சுனைகளை துார்வாரி சுத்தம் செய்தனர். மேலும் மலையில் இருந்து இயற்கையாக வரும் தண்ணீர் சுனைகளில் தேங்குமாறு வடிகால் அமைத்தனர். தொல்லியல் துறையினர் செய்ய வேண்டியதை சமூக ஆர்வலர் செய்ததால் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.