பதிவு செய்த நாள்
14
நவ
2012
09:11
நாகர்கோவில்: மண்டலகால பூஜைக்காக சபரிமலை நடை நாளை மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நவ.,16 அதிகாலை முதல் மண்டலகால பூஜைகள் தொடங்குகின்றன. கார்த்திகை 1ம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜை ஒரு மண்டகாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் நவ.,16ல் தொடங்குகிறது. இதற்காக நாளை மாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. பதவிகாலம் நிறைவு பெறும் மேல்சாந்தி பாலமுரளிநம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து இந்த ஆண்டுக்கான புதிய மேல்சாந்தி வைக்கம் தாமோதரன் நம்பூதிரி, மாளிகைப்புறம் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி இருமுடி ஏந்தி 18 படியேறி கோயிலுக்கு வருவார்கள். தொடர்ந்து இரவு 7 மணிக்கு சபரிமலை புதிய மேல்சாந்தி தாமோதரன் நம்பூதிரிக்கு, தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி, ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து செல்வார். இதுபோல மாளிகைப்புறம் கோயில் முன்புறம் புதிய மேல்சாந்திக்கு அபிஷேகம் நடத்தப்படும். வேறு விசேஷபூஜைகள் நடைபெறாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
16 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல்சாந்தி தாமோதரன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். மண்டலகால நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைப்பார். பின்னர் கணபதிஹோமமும், வழக்கமான பூஜைகளும் நடைபெறும். டிச., 26ல் மண்டலபூஜை நடைபெறுகிறது. பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் சபரிமலையில் செய்யப்படுகிறது. எட்டு மாதங்களாக தேவசம்போர்டுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத நிலையில், கோவிந்தன்நாயர் தலைவராகவும், சுபாஷ் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டல மகரவிளக்கு திருவிழா ஒருங்கிணைப்பாளராக, முன்னாள் தலைமை செயலாளர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சுவாமி ஐயப்பன் ரோடு முழுமையாக கான்கிரீட் செய்யப்பட்டுள்ளதால், தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்களின் சிரமம் சற்று குறைவாக இருக்கும். குடிநீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு வசதியை கேரள போலீஸ் துறை இந்த ஆண்டும் அமல்படுத்தியுள்ளது. www.keralapolice.org , www.sabarimalaq.com இணையதங்களில் முன்பதிவு செய்யலாம்.