பதிவு செய்த நாள்
14
நவ
2012
10:11
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன், நேற்று துவங்கியது.இதனை யொட்டி, கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6 மணிக்கு, சுவாமி ஜெயந்திநாதர், யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, சண்முகசுந்தர பட்டர் தலைமையில், 7 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சிகால தீபாராதனையைத் தொடர்ந்து, யாகசாலை தீபாராதனைநடந்தது. பின்னர், அங்கிருந்து, சுவாமி ஜெயந்திநாதர், தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி, சண்முகவிலாச மண்டபம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிகாலை முதலே, ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து, ஆறுநாள் சஷ்டிவிரதத்தை துவக்கினர். வேண்டுதலுக்காக, அங்கப்பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் செய்தனர். விழாநாட்களில், தினமும், காலை, மாலை யாகசாலை பூஜை, தீபாராதனை, சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், ஆறாம் நாளான, நவ., 18ம்தேதி மாலை நடக்கிறது. நவ.,19ம் தேதி, சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.