பதிவு செய்த நாள்
08
ஜூலை
2024
12:07
உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம், வயலக்காவூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஏலவார் குழலி அம்பாள் சமேத வாசீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் கட்டட பகுதிகள் சிதிலமடைந்ததை அடுத்து பராமரிப்பு பணி மேற்கொள்ள அப்பகுதியினர் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, அறநிலையத்துறை நடவடிக்கையின்படி, ராஜகோபுரம் மற்றும் மண்டபத்தில் சேதமான பகுதிகள் சீரமைக்கும் பணி, சில நாட்களாக நடைபெற்று வந்தது. மேலும், அதனுடன் 27 அடி உயரம் கொண்ட புதிய கொடிக்கம்பம் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தன. இக்கோவில் திருப்பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 5ம் தேதி காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜைகளும், மாலையில் மூலவர் பரிவார மூர்த்தி அஷ்டபந்தன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று, காலை 9:00 மணிக்கு ராஜகோபுரம்மற்றும் விமான கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து 9:30 மணிக்கு பரிவார மூர்த்திகள், மூலவர் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.