பதிவு செய்த நாள்
10
ஜூலை
2024
12:07
உடுமலை; உடுமலை மதுரை வீரன் கோவில் திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை யு.எஸ்.எஸ்., காலனியில், ஸ்ரீ மதுரை வீரன் கோவில் உள்ளது. அப்பகுதியில், 57 ஆண்டுகளாக சுவாமி அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் திருவிழா நேற்று துவங்கியது. நேற்று காலை, 6:30 மணிக்கு, திருத்தலங்களில் தீர்த்தம் எடுத்து வருதலும், மாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் விநாயகர் கோவிலில் சக்தி அழைத்தலும் நடந்தது. விழாவில், இன்று காலை, 6:30 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதலும், காலை, 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் ஸ்ரீ மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து, மாவிளக்கு, பூவோடு எடுத்தலும், யு.எஸ்.எஸ்., காலனியில் சுவாமி வீதி ஊர்வலமும் நடைபெற்றது. நாளை (11ம் தேதி) மஹா அபிஷேகம், பொங்கல் வைத்து வழிபாடும், 12ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. இவ்விழாவில், உடுமலை யு.எஸ்.எஸ்., காலனி மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், யு.எஸ்.எஸ்., காலனி பொதுமக்கள் செய்து வருகின்றனர்