பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
02:07
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. திருவிழா மற்றும் விஷேச தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விடுமுறை நாள் என்பதால் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல நடந்தன. அதிகாலை முதலே திரண்ட பக்தர்கள், கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில், 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையிலும் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையே, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஐந்து பெண்கள் மற்றும் ஓர் ஆண் என ஆறு பேர் நேற்று திருச்செந்துார் கோவிலுக்கு வந்தனர். ருத்ராட்சம் அணிந்தபடி, சுவாமி தரிசனம் செய்த அவர்கள், தங்களது பெயர், ராசியை கூறி தமிழில் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து வள்ளி குகை அருகே புரோகிதர்கள் முன்னிலையில் யாகம் செய்தும், கடற்கரை அருகேயுள்ள மூவர் சமாதியில் தியானம் செய்தும் அவர்கள் வழிபட்டனர். கோவில் முன் அமர்ந்திருந்த யாசகர்கள் அனைவருக்கும் வேஷ்டி தானம் வழங்கினர். முருகன் கோவிலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர்கள் கூறினர். தமிழில் வணக்கம் என கூறிய ஜப்பான் பக்தர்களிடம் ஏராளமான பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.