பதிவு செய்த நாள்
16
ஜூலை
2024
11:07
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் கடக சங்கரமணத்தில் திருமலையில் ஆனிவார ஆஸ்தானம் நடைபெறும்.
ஆனி மாதத்தில் இறுதி நாளாவதால் ஆனிவார ஆஸ்தானம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் இந்த ஆஸ்தானம் நடைபெறும். முற்காலத்தில் தேவஸ்தான கணக்கு வழக்குகள் இந்த நாளில் தான் எழுதத் தொடங்குவர், புராண காலத்திலிருந்து இந்த நாள் தான் கணக்கு தொடங்கும் நாளாக இருந்து வந்தது. ஆனால் அது காலப்போக்கில் ஏப்ரல் மாதத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த உத்ஸவம் மட்டும் அதை நினைவுபடுத்தும் வகையில் இந்நாளிலேயே நடைபெறுகிறது. இன்று ஆனிவார ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது. தங்க வாயில் முன் ஸர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமலையப்ப ஸ்வாமியை எழுந்தருளினார். மற்றொரு பீடம் மேல் விஷ்வக்ஸேனரை எழுந்தருளச் செய்து, சுவாமிகளுக்கு ஸ்ரீரங்கம் பட்டுப்புடவை, வஸ்த்திரம், அட்சதை சமர்பித்து நைவேத்தியம் நடைபெற்றது. பின் செயலாட்சி தலைவருக்கு தேவஸ்தான கொத்துசாவியுடன் கூடிய ஆரத்தியும், சடாரி சேவையும் நடைபெற்றது. பின்னர் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஒட்டி, நித்ய ஆர்ஜித சேவைகளான தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டன.