பதிவு செய்த நாள்
19
ஜூலை
2024
10:07
கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மூன்று மாநில எல்லையாக இருந்து வரும் ஆந்திராவின் குப்பம் பகுதியில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இருந்து வருவது திருப்பதி கெங்கையம்மன். அம்மன் பக்தர்களின் நம்பிக்கை க்கு உள்ள பெரிய கோவிலாக விளங்குகிறது.
கோவில் பூஜாரி சண்முகம் செட்டி என்பவர் கூறியதாவது: குப்பம் நகரில் விநாயகர் கோவில் தெருவில், பூ பறிக்க சென்றவர்களுக்கு அம்மன் தோன்றினார். வழியில் சிறிய அம்மன் சிற்பங்கள் உள்ளன. அதனை வைத்து கோவிலை கட்டி வழிபடுங்கள் என்று கூறியதால், கோவில் கட்டப்பட்டது. சிறிய அம்மன் சிலைகளை வைத்து முத்து மாரியம்மன் கோவிலாக வழிபட்டனர். வாந்தி, பேதி, பெரிய, சிறிய அம்மை நோய் ஏற்பட்டவர்கள், முத்து மாரியம்மனை வழிபட்டனர். இத்தகையோருக்கு நோய் குணமானது. இக்கோவிலில் முத்து மாரியம்மன், விநாயகர் வழிபாடுகள் நடந்தன. இதை தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கு முன் திருப்பதியில் இருந்து கெங்கையம்மன் சிரசு கொண்டு வரப்பட்டது. இக்கோவிலை திருப்பதி கெங்கையம்மன் கோவிலாக வழிபட துவங்கினர். அம்மனை வழிபடும் பக்தர்கள் குளியலுக்காக கோவிலில் தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. ஆண்டு தோறும் உகாதி, சிரசு விழா, ஆடித் திருவிழா கொண்டாடுவது வழக்கம். பக்தர்கள் அம்மன் வேடம் தரித்து, நகர்வலம் வந்து நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். நோய் தீர அம்மன் வழிபாடு நற்பலனை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இங்கு நடக்கும் அம்மனின் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் வந்து பூஜிக்கின்றனர். இது மட்டுமின்றி ஆண்டுதோறும் மே மாதத்தில் எட்டு நாட்கள், பிரசன்ன திருப்பதி கங்கையம்மன் திருவிழா நடக்கிறது. விநாயகர் உற்சவம், பிரசன்ன முத்து மாரியம்மன் உற்சவம்; சேஷவாகனம்; சிம்மவாகனம்; அஸ்வவாகன உற்சவம் நடக்கிறது. முக்கியமாக பிரசன்ன முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அக்னி குண்டம், இரவு பூப்பல்லக்கு, கரகம், நையாண்டி, வாணவேடிக்கை நடக்கிறது. பிரசன்ன திருப்பதி கங்கையம்மன் கண் திரை நீக்கி பூஜை ஆராதனை நடக்கிறது. அம்மன் விஸ்வரூப தரிசனம், தீப ஆராதனை நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாறுவேடம் அணிந்து தங்கள் நேர்த்தி கடன் தீர்ப்பர். ஆந்திரா மட்டுமின்றி, கர்நாடகாவின் கோலார், பெங்களூரு, தமிழகத்தில் இருந்து பக்தர்கள் திரளாக வருகை தருவர்.