ஆடி வெள்ளி தரிசனம்; கருடன்கள் வட்டமிட்ட இடத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2024 10:07
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் கெஞ்சனஹள்ளியில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடந்த 1960 ஜனவரி 14 ம் தேதி சங்கராந்தி அன்று திருச்சி மஹாசுவாமிகள் காரில், திருச்சியில் இருந்து மைசூருக்கு காரில் பெங்களூரு வழியாக சென்றார். பெங்களூரு நகரின் தென்மேற்கே ஆறு கி.மீ. தொலைவில், அவருக்கு மேலே வானத்தில் மூன்று கருடன்கள் சுற்றி வருவதைக் கண்டார். அவைகளில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் உருவங்களை கண்டார். இதையடுத்து காரில் இருந்து இறங்கி நடந்து சென்று, கெஞ்சனஹள்ளி கிராமத்தை அடைந்தார். அங்கு தனது ஆசிரமம் அமைக்க முடிவு செய்தார். 1960 ம் ஆண்டு ஏப்ரலில், ஆசிரமம் அமைந்துள்ள பகுதியில் ராஜராஜேஸ்வரி கோவில் கட்ட, திருச்சி மஹா சுவாமிகளால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் அங்கு கோவில் கட்டப்பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்று போற்றப்படும் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்குள் உள்ள அறிவிப்பு பலகைகள் தமிழ், கன்னடத்தில் வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். தினமும் காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.