பதிவு செய்த நாள்
23
ஜூலை
2024
06:07
செய்யூர்; செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில் துர்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமை, ஆடி திருவிழா விமரிசையாக நடத்தப்படும். அதேபோல, இந்த ஆண்டு 28ம் ஆண்டு ஆடி திருவிழாவை விமரிசையாக நடத்த, விழாக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, ஆடி திருவிழா, 21ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. பின், கொடி ஏற்றுதல், ராகுகால சிறப்பு பூஜை, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மாலை 4:30 மணிக்கு, திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகத்துடன், பக்தர்கள் பழம் குத்தியும், செடல் ஏந்தியும் விதியுலா வந்தனர். பின், முக்கிய நிகழ்ச்சியான பால் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில், துர்க்கையம்மன் வீதியுலா நடந்தது. கடப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.