பதிவு செய்த நாள்
26
ஜூலை
2024
10:07
ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு செய்ய சிறந்த நாள். ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள். இன்று அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுதல் சிறப்பு. ஆடிமாதத்தின் கண்ணாக போற்றப்படும் ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் அம்பிகை வழிபாட்டுக்குரிய சிறப்பு நாட்களாகும். காஞ்சி மகாபெரியவர் மடத்தில் வாழ்ந்த காலத்தில், ஆடிவெள்ளியன்று பெரியவரே முன் நின்று திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரருக்கு பூஜை செய்வார். அப்போது பக்தர்கள் லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், துர்க்காஷ்டகம், தேவி மகாத்மியம் போன்ற பாடல்களை இசையுடன் பாடுவர். அப்போது பெரியவரும் சேர்ந்து பாடுவது காண்போரைப் பரவசப்படுத்தும் அரிய காட்சி. பூஜை முடிந்ததும், ஆடி மாத அம்பிகை வழிபாடு குறித்த விஷயங்களை பெரியவர் எடுத்துரைப்பார். வீடோ, துணியோ, உடம்போ அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு சாட்சாத் பராசக்தியும், பரமேஸ்வர பத்தினியுமான அம்பாளுடைய சரணாவிந்த தியானம் தான் வழி. அம்பாளின் தியானத்தை விட வேறு ஏதும் வேண்டியதே இல்லை. அவளது அருளால் நாம் சாந்தியும், ஆனந்தமும் அடைவோம், என்று அறிவுரை சொல்வார். சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். இன்று அம்மன், முருகனை வழிபட அனைத்தும் கிடைக்கும்.. நன்மைகள் நடக்கும்.