பதிவு செய்த நாள்
06
ஆக
2024
11:08
திருவொற்றியூர்; திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கோவிலுக்கு வருகை தருவர்.
இக்கோவிலினுள் பிரம்ம தீர்த்தம்; வெளியே ஆதிசேஷ தீர்த்தக்குளமும் உள்ளது. ஆண்டுதோறும், தைப்பூசத்தையொட்டி, மூன்று நாட்கள், ஆதிசேஷ குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். பெரும்பாலும் இக்குளம் வறண்டு போவதால், பலமுறை தெப்ப உற்சவம் நடைபெறாமல் போய் விட்டது. கடைசியாக, கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, குளம் முழுதுமாக நிரம்பி ரம்மியமாக காட்சியளித்தது. அதன் பின், முழுமையாக நிரம்பியதாக வரலாறு இல்லை. இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கிடைத்த மழைப்பொழிவால், 12 படிக்கட்டுகள் அளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்தது. இதையடுத்து தைப்பூச தெப்ப உற்சவம் நடைபெற்றது. அதன்பின், ஒரு சில வாரங்களில் குளம் வறண்டது. தற்போது கட்டாந்தரையாக உள்ளது.
இது குறித்து நீர்நிலை ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கூறியதாவது: ஆதிசேஷ குளத்தை பொறுத்தவரை தண்ணீர் வரத்திற்கு நீர்நிலைகள் ஆதாரம் ஏதும் கிடையாது; மழை நீர் ஒன்றே ஆதாரமாக உள்ளது. எனவே, மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி, மீண்டும் ஒருமுறை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், அடைப்பு மற்றும் கழிவு நீர் கலப்புகள் குறித்து தெரியவரும். சில ஆண்டுகளுக்கு முன், குளத்தில் தண்ணீர் தேங்குவதற்கு ஏதுவாக, ஒன்றரை அடி அளவிற்கு களிமண் லேயர் அமைக்கப்பட்டது. தற்போது அதன் நிலை என்ன என்பது தெரியவில்லை.குளத்தில் தண்ணீர் தேங்க மாற்றுவழி யோசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர்கள் கூறினர்.