பதிவு செய்த நாள்
06
ஆக
2024
11:08
திருப்பூர்; தியாகத்தின் அடையாளமாக விளங்கும், நொய்யல் நல்லம்மனுக்கு, பக்தர்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர்.
நொய்யல் ஆற்று தண்ணீரை எடுத்து, ஆண்டு முழுவதும் பாசனம் செய்ய வசதியாக, கொங்கு சோழர்கள் காலத்தில், தடுப்பணைகள், குளம், குட்டைகள் அமைக்கப்பட்டன. அதன்படி, மங்கலம் அருகே, நொய்யலின் குறுக்கே கட்டப்பட்டது நல்லம்மன் தடுப்பணை.
தியாகத்தின் அடையாளமாக, திருப்பூர் மக்களால் போற்றி வணங்கப்படும் நல்லம்மன் கோவிலும், அணையின் மையத்தில் உள்ளது. அணை கட்டுமான பணி நடந்த போது, அணைக்காக தனது இன்னுயிரை கொடுத்த சிறுமி நல்லம்மாள். அவரது நினைவாக, இன்றும் கோவில் அமைத்து, அவரது வழி வந்தவர்கள் வழிபட்டு வருகின்றனர்.
நல்லம்மன் கோவிலில், ஆடி மாதம், கார்த்திகை மாதம் என, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆண்டு முழுவதும் அணைக்கு தண்ணீர் வர வேண்டுமென வேண்டி, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறுவர், சிறுமியர் விரும்பி உண்ணும் திண்பண்டங்கள் வைத்து, பொங்கல் வைத்து படையலிட்டு, பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, ஆற்றில் செல்லும் தண்ணீரில் மலர்களை துாவியும் வழிபட்டனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,‘ஒவ்வொரு ஆண்டும், ஆடிப்பெருக்கு விழாவுக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை, விழா எடுத்து வழிபட்டு வருகிறோம். பொங்கல் வைத்து, நல்லம்மன் மற்றும் கன்னிமார் சுவாமிகளுக்கு படையலிட்டு வழிபட்டு வருகிறோம். தியாகத்தின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; ஆண்டு முழுவதும் அணையில் தண்ணீர் செல்ல வேண்டுமென வேண்டுதல் செய்து வருகிறோம்,’ என்றனர்.