ராமேஸ்வரம்; ஆடித்திருவிழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ரத வீதியில் பர்வதவர்த்தினி அம்மன் ஆடித்தேரோட்டம் நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், ஆடித்திருக்கல்யாணம் திருவிழா ஜூலை 29ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 14 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை 9:00 மணிக்கு, கோவிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ஆடித் திருத்தேரில் எழுந்தருளினார். பின் கோவில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தியதும் அங்கு கூடியிருந்த இணை ஆணையர் சிவராம்குமார், நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, நகராட்சி முன்னாள் தலைவர் அர்ச்சுனன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் உட்பட பக்தர்கள் பலர் தரிசனம் செய்து தேரின் வடத்தை இழுத்து கோவில் நான்கு ரத வீதியில் வலம் வந்தனர்.