பதிவு செய்த நாள்
08
ஆக
2024
03:08
நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர்.
அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, நமது கோரிக்கைளை நிறைவேற்றித் தரும்படி இந்த நாளில் வேண்டிக்கொள்ளலாம். திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்ளலாம். அன்று வாசலில், சிறிய அளவில் பாம்புக்கோலம் இட வேண்டும். பாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர், துர்க்கையை மனதில் நினைத்து, செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும். அன்று பகலில் பால், பழமும், இரவில் எளிய உணவும் சாப்பிடலாம். பாம்பு தீண்டி இறந்த தன் சகோதரர்களைக் கண்டு வருந்திய பெண் ஒருத்தி நாகராஜரை வேண்டி பூஜித்தாள். நாகராஜரும் மகிழ்ந்து, அவளுடன் பிறந்த ஐந்து சகோதரர்களையும் உயிர் பிழைக்கச் செய்தார். இந்த நிகழ்ச்சி நடந்த நாளாக நாக சதுர்த்தி கருதப்படுகிறது. இந்நாளில் நாகர்கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி அருகிலுள்ள நயினார்கோவில், கொழுவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய ஊர்களிலுள்ள நாகநாதர் கோயில்களுக்குச் சென்று வணங்கி வரலாம்.
ஆதிசேஷன், வாசுகி, பத்மன், மகாபத்மன், தக்ஷகன், கார்க்கோடன், சங்கன், சங்கபாலன் ஆகிய நாகங்களின் பெற்றோர் கச்யபர் - கத்ரு தம்பதிகள் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆதிசேஷன், திருமாலின் படுக்கையாக பூமியைத் தாங்கும் பாக்கியம் பெற்றார். திருபாற்கடலைக் கடைந்து அமிர்தம்பெற தேவாசுரர்கள் முயன்றபோது. வாசுகி என்னும் பெரும் பாம்பினை கயிறாகப் பயன்படுத்தினார்கள். பத்மன், சூர்யாந்தர்யாமி எனும் மந்திரத்தை தர்மாரண்யன் எனும் அந்தணருக்கு உபதேசித்தவர். மகாபத்மன் வடதிசையின் காவலன். கார்க்கோடகன் ஈசனின் மோதிரமாகத் திகழ்கிறார். தக்ஷகன் பரீட்சித்து மகாராஜனைக் கடித்து வைகுண்டம் அனுப்பினார். சங்கபாலன், ஈசனின் சிகரத்தை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்றார். தமிழகத்தில் வடஆற்காடு கீழ்தஞ்சை மாவட்டம், கன்னியாகுமரி போன்ற தலங்களில் நாக கன்னிகைகள் கோயில்கள் உள்ளன.
துரபி, சாதான், வித்திட்டி, குஞ்சினி, பாவனா, சரிகா, தூந்திரி என்கிற ஏழு பெண்கள் நாகக்கன்னிகைகளாக பூலோகத்தில் இந்திரன் அருள்பெற்று வந்ததாகவும், அவர்கள் சில கோயில்களில் சிலா வடிவத்தில் எழுந்தருளியிருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இந்த நாகக்கன்னிகைகள் தம்மை வழிபடும் கன்னிப்பெண்களுக்கு தோஷங்களை நீக்கி, விரைவில் திருமண பாக்கியத்தை வழங்குகிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள்தான் நாகத்தை வணங்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். அனைவருமே நாகர்சிலையை வழிபடலாம். நாகங்கள் குடியிருக்கும் புற்றுக்குப் பூஜை செய்தாலும் தோஷங்கள் நீங்குவதுடன் நினைத்த நல்ல காரியங்கள் வெற்றியடையும். எனவே, நாகசதுர்த்தியன்று நாகர்சிலை உள்ள கோயில் அல்லது நாகநாதர் என்று பெயர்பெற்ற ஈசன் கோயிலுக்குச் சென்று வழிபட நலமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.