பதிவு செய்த நாள்
09
ஆக
2024
05:08
கோவை; ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
ஆடி நான்காம் வெள்ளி கோவை அம்மன் கோவில்களில், சுமங்கலி பெண்களுக்கு மங்கலப்பொருட்களை மூத்த சுமங்கலி பெண்கள் வினியோகித்து அமர்க்களப்படுத்தினர். கோவையில் ஆடி மாதத்தில் வந்த ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் வெகு விமரிசையாக விழா நடத்தப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தங்கப்பாவாடை சாத்துதல், தங்கரதத்தில் அம்மனை அழைத்துச்செல்லுதல், பட்டுவஸ்திரம் சாத்துதல், சகலவித திரவிய அபிஷேகம். மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு, கண்ணாடிவளையல், கால்களில் அணியும் மெட்டி வழங்குதல், இலவச அன்னதானம் என்று ஏராளமான பொருட்களை கோவில்களில், சுமங்கலி பெண்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி கோவை வெள்ளலூர் ஸ்ரீ கொண்டத்து மாகாளியம்மன் கோவிலில் அம்மன் சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
*கோவை மசக்காளி பாளையம் ஸ்ரீ வீரமாச்சி அம்மன் கோவிலில் அர்த்தநாரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
*கோவை விளாங்குறிச்சி சங்கரா நகர் ஸ்ரீ வலம்புரி விநாயகர் திருக்கோவிலில் ஸ்ரீ கருமாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
*கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீட அங்காளபரமேஸ்வரி அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
*கோவை ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் ஸ்ரீ குழந்தை வடிவான சீர்காழி மாரியம்மன் கோவிலில் குங்கும காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவை அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.