பதிவு செய்த நாள்
12
ஆக
2024
10:08
கோவை; ரத்தினபுரி பொங்கியம்மாள் வீதியிலுள்ள கருமாரியம்மன் திருக்கோவில், 43ம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த ஜூலை 23ல், கணபதி ஹோமத்துடன் கொடியேற்றம் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மறுபூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்மன் திருவீதி உலா, கடந்த வெள்ளியன்று மாலை நடந்தது. அப்போது சிறப்பு அழைப்பாளர்களாக அதே வீதியில் உள்ள, சி.எஸ்.ஐ., துாயபேதுரு கிறிஸ்தவ தேவாலய ஆயர் மற்றும் தலைவர் விக்டர் பிரேம்குமார் மற்றும் செயலாளர் சந்தோஷ், பொருளாளர் ரிச்சர்ட் ஆகியோர், அம்மனுக்கு இனிப்பு, பழங்களை சமர்ப்பித்தனர். இஸ்ஸத்துல் இஸ்லாம் ஷாபிய்யா சுன்னத் ஜமாத் மற்றும் மதரஸா தலைவர் சுலைமான், துணைத்தலைவர் அல்தாப், செயலாளர் குலாம்தாரிக், ஆடிட்டர் ராஜாமுகமது ஆகியோர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து இனிப்பு, பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை அம்மனுக்கு சமர்ப்பித்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, இரு மதத்தினருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் தலைவர் குப்புச்சாமி மற்றும் தர்மகர்த்தா சுகுமாறன் ஆகியோர் கூறுகையில், ‘ கிறிஸ்தவர்களின் ஆலய பிரதிஷ்டை உள்ளிட்ட விழாக்களிலும், இஸ்லாமியர்களின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது வழக்கம். அவர்களும் கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். இது மதநல்லிணக்கத்திற்கு முன்னுதாரணம்’ என்றனர்.