பதிவு செய்த நாள்
12
ஆக
2024
05:08
நாமக்கல்; நாமக்கல் அருகே நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
நாமக்கல் அருகே ஏ.எஸ்.பேட்டையில் இருந்து போதுப்பட்டி செல்லும் சாலையில், காமாட்சி அம்மன் நந்தவனம் அமைந்துள்ளது. இங்கு, 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். அதன்படி, கடந்த 10ம் தேதி இரவு, ஏ.எஸ்.பேட்டை பகவதி அம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் சிறுவர்கள், மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். அதையடுத்து கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்தனர். பிடிமண் எடுத்து உருவம் செய்து வழிபட்டனர். நேற்று முன் தினம் மதியம் மஹா பூஜை நடந்தது. அப்போது, ஆடுகள் பலியிடப்பட்டன. பக்தர்கள் தரிசனம் செய்த பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் பெண்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆண்கள் மட்டுமே பூஜையை நடத்தினர். சமையல் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஆண்களே செய்தனர். மீதமான சாப்பாடு, சாப்பிட்ட இலை உள்ளிட்ட அனைத்தையும் அங்கேயே குழி தோண்டி புதைத்தனர். இதையடுத்து மண்ணால் செய்யப்பட்ட உருவங்களை எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் கரைத்து விட்டனர். இந்த பூஜை, 21 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவித்தனர்.