வரலட்சுமி விரதம் ; வீட்டில் செய்ய வேண்டிய எளிமையான பூஜை முறை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2024 07:08
வரலட்சுமி விரதத்தை மிகவும் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. அவரவர் சக்திக்கு உட்பட்டு செய்யலாம். வசதி படைத்தவர்கள் கலசம் வைத்து, விக்னேஸ்வர பூஜையுடன் விரதத்தை தொடங்க வேண்டும். சங்கல்பம், கலச பூஜை, பிராண ப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம் (16 வகை பூஜை), லட்சுமி அஷ்டோத்ரம், பிரார்த்தனை, ஆரத்தி ஆகியவற்றை புரோகிதர்களைக் கொண்டு செய்யலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை, அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்க வேண்டும்.
இந்த நாளில் மட்டும் நோன்புச்சரடை வலது கையில் கட்டிக்கொள்ள பெண்களுக்கு அனுமதி உண்டு. ஓரளவு வசதி படைத்தவர்கள் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்ட வேண்டும். மூத்த சுமங்கலிகளிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும். முடிந்தவரை தானம் செய்யலாம். பரம ஏழைகள் தங்கள் வாயால் லட்சுமி குறித்த ஸ்லோகம் அல்லது பாடல்களைப் பாடினால் போதும். லட்சுமி தாயார் மனம் மகிழ்ந்து நோன்பை ஏற்பாள். அவள் விரும்புவது பக்திப்பூர்வமான ஈடுபாடு மட்டுமே!