தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2024 05:08
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. காலை 8:00 மணியிலிருந்து 9:15 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் தொடர்ந்து 10நாட்கள் பொங்கல் விழா நடைபெறும்.இந்த விழா நாட்களின் போது தமிழகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி சென்று வருகின்றனர்.இந்நிலையில் இக்கோயிலில் நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்காக கோயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் கடந்த 19ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் ஆரம்பமாகின. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து யாகசாலைகளில் பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நாளை காலை 5:30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை ஆரம்பமாகி காலை 8:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடைபெற்று கடங்கள் புறப்பாடாகி 9:15 மணிக்குள் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக,ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற உள்ளன. பின்னர் கோயில் வளாகப் பகுதியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்,விழா கமிட்டியினர், கோயில் பணியாளர்கள்,கிராம மக்கள் செய்து வருகின்றனர்.