புதுச்சேரி; நாடி ஜோதிட பரிகாரத்திற்காக புதுச்சேரி கோவில்களில் தமிழ் பாரம்பரிய உடையில் ஜப்பான் நாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகள் வழிபாடு செய்தனர். அறிவியல் வளர்ச்சியில் முதன்மை நாடாக விளங்கும் ஜப்பானில் இந்து மத கலாச்சாரம் மற்றும் ஆன்மீக வழிபாடுகளை ஜப்பானியர் விரும்புகின்றனர். இதனால், இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற இந்துமத கோவில்களுக்கு ஜப்பானியர் வருகை அதிக அளவு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சென்னை தீ.நகரை சேர்ந்த நாடி ஜோதிடர் கவுசிகனிடம் கடந்த சில நாட்களாக முன்பு ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்த யோஷி தக்கா, சயாக்க, இசாமூ உள்பட 14 பேர் குடும்ப பிரச்சினை, நோய்த்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை காரணமாக நாடி ஜோதிடம் பார்த்துள்ளனர்.இதில், இவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள 14 கோவில்களுக்கு சென்று பரிகார பூஜை செய்ய வேண்டும் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா வந்த ஜப்பானிய ஆன்மீக சுற்றுலா பயணிகள் குழுவினர் கடந்த 20 ஆம் தேதி முதல் பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்றம், அழகர் கோவில் என வரிசையாக ஒவ்வொரு கோவிலாக சென்று வஸ்திர தானம் கொடுத்து பரிகார பூஜை செய்து வருகின்றனர். நேற்று, மொழி பெயர்ப்பாளர் ராதிகா, ஜோதிடர் கவுசிகன் தலைமையில் புதுச்சேரி பஞ்சவாடி ஆஞ்சநேயர் மற்றும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்த ஜப்பான் குழுவினர் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, சேலை அணிந்து கொண்டு சாமி தரிசனம் மற்றும் வஸ்திர தானம் செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.