பதிவு செய்த நாள்
19
நவ
2012
11:11
ராசிபுரம்: கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா, ராசிபுரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேவர்களை சிறை பிடித்த அசுரர்களை முருகன் வதம் செய்து, தேவர்களை விடுவித்த நிகழ்ச்சியே சூரசம்ஹாரம். கந்தசஷ்டி அன்று அனைத்து முருகன் கோவில்களிலும், இந்நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. ராசிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில், முருகன் ஸ்வாமி தெற்கு நோக்கி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு, சுப்ரமணியர் ஸ்வாமி மற்றும் ஆறுமுக ஸ்வாமிக்கு கந்தசஷ்டி விழா, கடந்த, 14ம் தேதி துவங்கியது. அதை தொடர்ந்து, விரதம் இருப்பவர்களுக்கு விரத காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி வரை, ஸ்வாமிக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. காலை, 7 மணிக்கு வேல் வாங்கப்பட்டு தர்மசம்வர்த்தினி அம்பாளிடம் வைத்து பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்தவேல் சுப்ரமணியர் ஸ்வாமி சன்னதியில் வைக்கப்பட்டது. 6.30 மணிக்கு மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்ரமணிய ஸ்வாமி ஒரு சப்பரத்திலும், மற்றொரு சப்பரத்தில் சூரபத்மனும் எதிர் எதிரே வந்தனர். அப்போது, அம்பாள் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட வேலால் சூரபத்மன், சிங்க மகாசூரன், கஜாமுகசூரன், தாராகசூரன் ஆகிய நான்கு சூரர்களையும், பழைய பஸ் ஸ்டாண்ட், கதர்கடை, ஆத்தூர் சாலை மற்றும் நாமக்கல் சாலை பிரிவு ஆகிய பகுதிகளில் வைத்து வதம் செய்து தலையை கொய்தனர். அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். இன்று (நவ., 19) காலை, 10 மணிக்கு முருகனுக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.