பதிவு செய்த நாள்
19
நவ
2012
11:11
ப.வேலூர்: தமிழகத்தின் பிற கோவில்களை போல, பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலுக்கும் சிறப்பு மிக்க வரலாறு உண்டு. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது இந்த கோவிலை தரிசித்ததால் தான், இந்த ஊருக்கு பாண்டமங்கலம் என்ற பெயர் வந்ததாக வரலாற்றுக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பஞ்ச பாண்டவர்கள் வனவாசம், அஞ்ஞாத வாசம் ஆகிய இரண்டையும் ஏற்றனர். இந்த இரண்டையும் அவர்கள் ஏற்பதற்கு கண்ணன் மீது கொண்ட பற்றே காரணம். கண்ணன் தங்களுக்கு துணை நிற்பான், எந்நிலையிலும் தங்களை காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கையும், பக்தியும் அவர்களிடம் இருந்தது. அவர்களின் பக்தியை ஏற்ற கண்ணன், 12 ஆண்டு வனவாசத்தின் போதும், ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசத்தின் போது அவர்களுடன் இருந்து தைரியம் அளித்தான். வனவாச காலமான, 12 ஆண்டுகள் உத்தரபாரதத்தில் (வடஇந்தியா) இருந்து, அஞ்ஞாத வாசத்துக்காக தட்சிணபாரத்துக்கு ( தென் இந்தியா) இடம் பெயர்ந்தனர். பஞ்ச பாண்டர்களின் வருகையில் தென் இந்தியா புனிதத் தன்மையை பெற்றது. தென் இந்தியா வந்த பாண்டவர்கள் ஏராளமான இடங்களில் கோவில்களை புனர்நிர்மாணம் செய்தனர். இதில் அதிக அளவில் பெருமாள், கண்ணனுக்கு கோவில்களை நிர்மாணித்தனர்.
பல கோவில்களை தரிசித்துக் கொண்டும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடி யாத்திரையாக வந்த பாண்டவர்கள் ஏராளமான புன்னை மரங்களை கொண்டு அழகான காடாக காட்சி அளிக்கும் இடத்தில், குளம் ஒன்றின் அருகே எழுந்தருளி இருந்த ஸ்ரீ வராஹப் பெருமானின் கோவிலை அடைந்தனர். வராஹப் பெருமானின் அழகை தரிசித்த திரௌபதி, சிறிது காலம் அங்கேய தங்க வேண்டும் என, பாண்டவர்களிடம் கூற, அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். அங்கு தங்கிய அவர்களின் கனவில், தோன்றிய திருமலை திருவேங்கடத்து இன்னமுதன் அந்த வனத்தில் தான் எழுந்தருளி உள்ளதை, உணர்த்தினார். மறுநாள் காலையில் எழுந்த பஞ்சபாண்டவர்கள் அந்த புன்னை மர வனத்தில் தேடி பார்த்தனர். அப்போது பூமிக்கு அடியில் இருந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவேங்கடமுடையான் சிலா திருமேனியாக வெளிப்பட்டான். அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த பாண்டவர்கள், ஸ்ரீவராக ஸ்வாமியின் கோவிலை மிகப்பெரியதாக விரிவுப் படுத்தி, அதில் திருவேங்கடத்து அமுதனை எழுந்தருளச் செய்து பூஜித்தனர். பாண்டவர்கள் இங்கு தங்கி இருந்து பெருமாள் கோவிலை எழுப்பிய இந்த ஊர், பாண்டவர் மங்கலம் என்று அழைக்கப்பட்டது. அதுவே காலப் போக்கில் மருவி, பாண்டவமங்கலம் என்றாகி, தற்போது பாண்டமங்கலம் என அழைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே, கபிலர்மலையில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்தில், பாண்டமங்கலம் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும், இந்த ஊரில் அருள் பாலிக்கும் பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் மக்களின் கைகளுக்கு எட்டாத ஆழத்தில், பூமிக்கடியில் சக்திவாய்ந்த யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதை போன்று கோவில் வளாகத்தில் உள்ள வராஹபுஷ்கரணி என்னும் தெப்பக் குளத்தின், அடியிலும் சக்தி வாய்ந்த யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதனால், தான் இந்த தெப்பக் குளத்தின் தீர்த்தம் கொடிய நோய்களை தீர்க்கும் சக்தியை பெற்றுள்ளது.
இங்கு அருள் பாலிக்கும் வராஹமூர்த்தி, செய்வினை உள்ளிட்ட தோஷங்களை நீக்கும் சக்தி படைத்தவராக விளங்குகிறார். இக்கோவிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமணப் பெருமாள், பக்தர்களின் வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் ஏற்று அருள்பாலிப்பதால், பிரசன்ன வெங்கட்ரமணன் எனவும், பக்தர்கள் கொண்டுள்ள பேரன்பினால் ரமண ( பிரிய மாணவன்) என்றும் பிரசித்த பெற்றுள்ள பெருமாள் என அழைக்கப்படுகிறார். புராதன தன்மையை கொண்டுள்ள இக்கோவிலில் தாயார் சந்நிதி, ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் கலைப் பொக்கிஷமான ஸ்ரீ சுதர்சன ஆழ்வார் ஆகியோரையும் தரிசிக்கலாம். வைணவ கோவில்களில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. ஆனால், பாண்டமங்கலம் கோவிலில் அழகான நவக்கிரக நாயகர்கள் தனிச்சந்நிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். பஞ்ச பாண்டவர்கள் தினமும் நவக்கிரக நாயகர்களைப் பூஜிப்பது வழக்கம். அவர்கள் எழுப்பிய இந்த கோவிலில் நவக்கிரக மூர்த்திகளுக்கு தனி சந்நிதி ஏற்படுத்தப்பட்டு தரிசிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. மனநோய்கள், செய்வினை தோஷங்கள், புத்திரபாக்கியமின்மை ஆகியவற்றுக்கு சக்திவாய்ந்த பரிகார தலம் இது. வராஹ புஷ்கரணியில் சங்கல்பம் செய்து கொண்டு நீராடுவது சர்ம நோய்களைப் போக்கும் வல்லமை படைத்ததாக உள்ளது. இத்தகு பெருமைமிக்க பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில், நவ.,23, காலை, 6 மணிக்கு நடக்கும் கும்பாபிஷேகத்தில், நாமும் கலந்து கொண்டு, பெருமாளின் அருளை பெறுவோமே.
கும்பாபிஷேக நிகழ்ச்சி: நவம்பர், 23 அதிகாலை 4.30 மணிக்கு, புண்யாஹவாசனம், நித்யாராதனம், ப்ரதான ஹோமம், பூர்ணாஹூதி, தஸதானம், தட்க்ஷணாதானம், க்ரஹபிரீதி, யாத்ரா தானம், சத்மப்ரதிக்ஷணம் ஆகியவற்றுடன் கும்பாபிஷேகம் துவங்குகிறது.
தொடர்ந்து, 5.30மணிக்கு பரிவார கும்பங்கள், அந்தந்த சன்னதியில் எழுந்தருளச் செய்தல், ப்ரதான கும்பம் யாகசாலையில் இருந்து சன்னதிக்கு எழுந்தருளச் செய்தல் ஆகியன நடக்கிறது. காலை, 6.15 மணிக்கு விமான சம்ப்ரோக்ஷணம் ( திருக்குடமுழுக்கு பெருவிழா) தொடர்ந்து கர்ப்பாலய மூர்த்திகளுக்கு சம்ப்ரோக்ஷணம் என்னும் மஹா கும்பாபிஷேகம், தரிசனாதிகள், திருவாராதனம், பிரம்மகோஷம், ஆசீர்வாதம், தீபாராதனை,தீர்த்தபிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் த்வஜாரோஹணம், வாகன சேவைகள், திருக்கல்யாண உற்சவம், திருக்கோடி, திருவாராதனம், திருவீதி புறப்பாடு ஆகியன நடக்கிறது. நவம்பர், 24ல் மண்டல பூஜை துவங்குகிறது.