பதிவு செய்த நாள்
07
செப்
2024
12:09
பிரிந்தவரை ஒன்று சேர்க்கும் புன்னைமரத்தடி பிள்ளையாரை மண்ணிலே செய்து வழிபட்டாலும், சந்தனத்தில் செய்து வைத்து வணங்கினாலும், கும்பிட்டவர்களின் வாழ்க்கையில் குதுாகலத்தை ஏற்படுத்துவார் கணபதி. அரசமரம், ஆலமரம், வன்னிமரம், வேப்பமரம், சந்தன மரம் என பல மரத்தின் அடியிலும் அற்புதமாக வீற்றிருப்பார் பிள்ளையார்.
எந்த மரத்தடியில் பிள்ளையார் இருக்கின்றாரோ, அந்த மரத்திற்குரிய நட்சத்திரம், நாள் பார்த்து அன்றைய தினம் யோகபலம் பெற்ற நேரத்தில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு வஸ்திரமும், மாலையும் அணிவித்து, அவல், பொரி, கடலை, அப்பம், மோதகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறும்.
அரச மரத்தடி பிள்ளையாரை எப்பொழுது வணங்கினாலும் உடனடியாக நற்பலன் கிடைக்கும். மேலும் மூல நட்சத்திரத்தன்று மோதகம் படைத்து, குறிப்பிட்ட அளவில் வலம் வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும். சந்தோஷங்கள் வந்து சேரும். இந்த பிள்ளையார் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. பூச நட்சத்திரத்தன்று இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்தால், விளைபொருள் மற்றும் பூமியால் லாபம் கூடும். பணக் கஷ்டம் தீரும்.
ஆலமரத்தின் கீழ், வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு, நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னங்களை நிவேதனம் செய்து, தானமளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். ஆலமரத்தடி விநாயகரை வழிபட்டால் ஞாலம் போற்றும் வாழ்வு அமையும். பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் கன்னிப் பெண்களுக்கு கவலை தீரும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வலஞ்சுழியாக வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.
புன்னை மரத்தடி பிள்ளையாரை ஆயில்ய நட்சத்திர தினத்தில் இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியரிடையே உள்ள மனக் கசப்புநீங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். விவாகரத்து கேட்டுகோர்ட் படி ஏறியவர்கள் கூட மனம் மாறி மகிழ்ச்சியோடு வாழ்வார்கள்.
வேப்ப மரத்தடி பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். வணிகர்களுக்கு வளர்ச்சி கூடும். தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து, பிரசாதமாக கொடுத்தால் தீராத கடன் தொல்லைகளும் தீரும். இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பு. உத்திரட்டாதி நட்சத்திர நாளில், தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னியருக்கு மனம் போல் மாங்கல்யம் கிட்டும்.
நெல்லி மரத்தடி பிள்ளையாரை பரணி நட்சத்திரம் அன்று வழிபட்டால் நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெய் கொண்டு 108 விளக்குகள் ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தால் இரும்பு தொழில் அமோகமாக நடைபெறும். பெண் குழந்தைகளுக்காக ஏங்குபவர்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும். மன அமைதி ஏற்படும்.
இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு, ஏழை சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால் உறவுகள் நண்பர்களுக்குள் இருந்த போட்டி, பொறாமை, கோபம் பகைமை மாறி, பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.
மகிழமரத்தடி பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர். நாவல் மரத்தடி விநாயகரை வழிபாடு செய்தால் குடும்ப ஒற்றுமை கூடும். அருகம்புல் மாலையை ஆனைமுகனுக்குச் சாத்தி வழிபட்டால் பொன், பொருள் பெருகும். இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் ஏழைச் சிறுவர்களுக்கு வெண்ணெய் தானம் அளித்து இவரை வழிபட்டு வர பிரிந்த தம்பதியர், பிரிந்த குடும்ப உறவுகள் ஒன்று சேர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும்.
வில்வ மரத்தடியில் அற்புதமாக அமர்ந்திருப்பார் பிள்ளையார். இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் தெற்கு நோக்கி இருப்பது சிறப்பு. சித்திரை நட்சத்திரத்தன்று, வில்வமரத்தடி விநாயகரை வழிபட்டு ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் அளித்து, வில்வ மரத்தைச் சுற்றி வர பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். வியாழன், புதன்கிழமைகளில் சந்தனத்தால் அலங்காரம் செய்து வழிபட்டால் புத்தகத்தை கண்டாலே தெறித்து ஓடும் பிள்ளைகளும் ஆர்வத்தோடு படிக்க ஆரம்பிப்பார்கள்.
சந்தன மரத்தடியில் பிள்ளையார் அமர்ந்திருப்பது அபூர்வமானது. இந்தபிள்ளையாருக்கு சதுர்த்தி, சதுர்த்தசிதிதிகளில் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட புதியதாக ஆரம்பிக்கும் வியாபாரம் அமோகமாக நடைபெறும். அரிய அபூர்வ சாதனைகளை நிகழ்த்தும் வலிமை கிடைக்கும்.
இலுப்பை மரத்தடி பிள்ளையாருக்கு ரேவதி நட்சத்திரம் அன்றும், செவ்வாய்கிழமைகளிலும் இவருக்கு பசுநெய் கொண்டு தீபம் ஏற்றி மஞ்சள் நிற ஆடைகளை சிறுமியருக்கு தானம் அளித்து வர வீடு கட்டடம் கட்டுபவர்கள் எந்தவிததடையும் இன்றி அதை கட்டி முடிக்க முடியும். தனித்து வாழும் முதியவர்கள், பெண்களுக்கு தற்காப்பு சக்தி அதிகரிக்கும்.தைரியம் தன்னம்பிக்கை கூடும்.