பதிவு செய்த நாள்
10
செப்
2024
11:09
மேட்டுப்பாளையம் : தமிழகம் ஆன்மிக பூமி என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர், என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
அவர் நேற்று அளித்த பேட்டி: விநாயகர் சதுர்த்தி தொடர்பான நிகழ்வுகளுக்கு தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாள் முதலே நெருக்கடிகள் தொடருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் வெற்றிவேல் யாத்திரை நடத்தினோம். அதற்கும் பல்வேறு தடங்கல்கள், தடைகள், தினம், தினம் கைது, என நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு தி.மு.க., அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்து, விநாயகர் ஊர்வலங்களை தடை செய்ய வேண்டும், விநாயகர் ஊர்வலங்களை நடத்துவதற்கு சிரமத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து செயல்பட்டனர். தமிழகம் ஒரு ஆன்மீக பூமி என்பதை இன்றைக்கு தமிழக மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். அதனால் தான் ஒவ்வொருவருடைய வீட்டிலும் விநாயகரை வைத்து வழிபடுகின்றனர். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு இன்றைக்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. தினம்தோறும் கொலை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. பல வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர். தமிழகத்தில் கஞ்சா புரையோடி போயிருக்கிறது. டாஸ்மாக் கடைகள் கிராமம் தோறும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை கஞ்சாவால் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் 25 பேர் இளம் விதைகளாக இருக்கின்ற நிலை உள்ளது. இந்த நிலைக்கு காரணம் தி.மு.க., அரசுதான். டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று சொன்னவர்கள், கடைகளை உயர்த்தி உள்ளனர். தமிழகம் ஆன்மிக பூமி என்பதை வலுவாக நிருபித்ததால், தி.மு.க.,வும் ஆன்மிக பாதைக்கு வந்துவிட்டது. அதனால்தான் அவங்களும் முருகன் மாநாடு நடத்தி உள்ளனர். ஆன்மிகத்தை ஆன்மிகமாக பார்க்க வேண்டும்; அரசியல் ஆக்கக்கூடாது. இவ்வாறு முருகன் கூறினார்.--