பதிவு செய்த நாள்
10
செப்
2024
11:09
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் நேற்று 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1,425 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்று நாட்கள் வழிபாடு செய்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டது. கடலுார் சுற்றுப்பகுதி கிராமங்களில் வழிபாடு செய்த சிலைகளை தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில்கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலையில் இருந்தே லாரி, மினிலாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் விநாயகர் சிலைகளை கரைக்ககடற்கரைக்கு கொண்டுவந்தனர். கடற்கரை போலீஸ் நிலையம் அருகில் வாகனங்களில் இருந்த விநாயகர் சிலைகளை பக்தர்கள் கீழே இறக்கி, தோளில் சுமந்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு விநாயகர் சிலைகளை கரைக்க நியமிக்கப்பட்டிருந்த குழுவினர் சிலைகளை கடலுக்குள் கொண்டு சென்று கரைத்தனர்.
நெல்லிக்குப்பம், பண்ருட்டி, கண்டரக்கோட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில்இருந்தும் பக்தர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கடலில் கரைத்தனர். எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க சிலைகளை கரைக்க வரும்போது பீச்ரோடு வழியாகவும், கரைத்து முடித்த பின்னர் புதுப்பாளையம் மெயின்ரோடு வழியாக செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிலை கரைக்க வந்த பக்தர்கள் கடலில் குளிக்கதடை விதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று 500க்கும் மேற்பட்டவிநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.