மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா, வருகிற, 21ம் தேதி துவங்க உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் மாசி மகத் தேரோட்டம், வைகுண்ட ஏகாதேசி, புரட்டாசி சனிக்கிழமை ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை விழா வருகிற, 21ம் தேதி நடைபெற உள்ளது. 28ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை விழாவும், அக்டோபர் இரண்டாம் தேதி மஹாளய அமாவாசையும் நடைபெற உள்ளது. நாலாம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்குகிறது. தொடர்ந்து, ஐந்தாம் தேதி மூன்றாம் சனிக்கிழமை விழாவும், அக்டோபர், 12ம் தேதி நான்காம் சனிக்கிழமை விழாவும், சரஸ்வதி பூஜையும், 13ம் தேதி விஜயதசமியும், குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி அம்பு போடும் விழாவும், 19ம் தேதி ஐந்தாம் சனிக்கிழமை விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, அறங்காவலர் குழுத் தலைவர் தேவ் ஆனந்த் மற்றும் அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவஹர், குணசேகரன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.